கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா? : பகுதி - 10


*ஓய்வூதியத்தைக் கானலாக்கிய, புதிய தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் அமைப்பு*

✍🏽திண்டுக்கல் எங்கெல்ஸ்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தினைச் செயல்படுத்த ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Pension Fund  Regulatory and Development Authority - PFRDA )என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

(இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி எந்த ஒரு மசோதாவும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அவ்விவாதத்தின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்கப்பட்ட பின்புதான் சட்டமாக்கப்படும். ஆனால், PFRDA மசோதா  10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டும் சட்டமாக்கப்படாமலேயே பாராளுமன்ற நெறிமுறைகளுக்கு மாறாகவும், உழைப்பாளி மக்களுக்கு எதிராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.)


*தேசிய ஓய்வூதியத் திட்ட அறங்காவல் அமைப்பு ( NPS Trust) :*
இந்திய அறங்காவலர் சட்டம் 1882-ன் படி, PFRDA-வால் 27.02.2008-ல் NPS அமைப்பு உருவாக்கப்பட்டது. இது சந்தாதாரர்களின் தொகையினை ஒவ்வொரு நாளும்; நிர்வாகம் செய்வதற்கும், பராமரிப்பதற்கும் நிறுவப்பட்டது. 3 மாதங்களுக்கு ஒருமுறை இயக்குனர்கள் கூட்டம் நடத்தப்பட்டு கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் திட்ட இயக்கம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்.


*அறங்காவலர் வங்கி (TRUSTEE BANK):*
நிர்வாகம் செய்தல், நிதியினைப் பொறுப்புடன் கையாளுதல், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் திரட்டப்பட்ட ஓய்வூதிய நிதியைப் பங்குச்சந்தை உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்ய வழிகாட்டுதல் போன்ற பணிகளை இது மேற்கொள்ளும். மத்திய நிதி அமைச்சகம் மற்றும் PFRDA வெளியிடும் அறிவிப்புகளை ஏற்று அறங்காவலர் வங்கி செயல்படும். அறங்காவலர் வங்கியாக அரசின் பொதுத்துறை வங்கியான BANK OF INDIA  30.06.2013 வரை செயல்பட்டது. 01.07.2013 முதல் அறங்காவலர் வங்கியாக வெளிநாட்டுத் தனியார் வங்கியான AXIS BANK செயல்படுகிறது.

*குறிப்பு:-* AXIS, HDFC, ICICI ஆகிய தனியார் நிறுவனங்கள் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டதால் இந்திய ரிசர்வ் வங்கி ரூ.48.5கோடி தண்டத் தொகை விதித்தது. இந்நிலையில் தான் ஆக்ஸிஸ் வங்கிக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேமிக்கப்பட்டுள்ள ஓய்வூதிய தொகை ரூ.1,38,000 கோடியைக் கையாளும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


*மத்திய கணக்குப்பதிவு முகமை (NSDL - CRA):*
ஒவ்வொருவருக்கும் தனத்தனியே நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN - Permanent Retirement Account Number) வழங்கி கணக்குப் பராமரிக்கவும், நிர்வாகம் மற்றும் நுகர்வோர் சேவை பணியினைக் கண்காணிக்கவும் மத்திய கணக்குப் பதிவு அமைப்பாக செயல்படுகிறது. அறங்காவலர் வங்கிக்கும் நிதி மேலாளர்களுக்கும் இணைப்புப் பாலமாக மத்திய கணக்குப் பதிவு முகமை செயல்படுகிறது.


*ஓய்வூதிய நிதி மேலாளர்கள் (Pension Fund Managers - PFM) :*
அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகையினை நிர்வகிக்கவும் இந்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி பங்குச்சந்தை உள்ளிட்ட திட்டங்களில்  கட்டாய முதலீடு செய்யவும் 5 ஆண்டு ஓப்பந்த அடிப்படையில்,
☀SBI Pension Fund Pvt. Ltd
☀UTI Retirement Solutions Ltd,
☀LIC Pension Fund Ltd
ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் ஓய்வூதிய நிதியினை நிர்வகிக்க
☀ICICI Prudential,
☀IDFC,
☀Kotak Mahendra,
☀Reliance Capital Ltd,
☀SBI Private Pension Fund Ltd,
☀UTI Retirement Solution Ltd,
☀HDFC
ஆகிய தனியார் நிறுவன நிதி மேலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் PFRDA நியமனம் செய்துள்ளது.


*ஓய்வூதியம் வழங்கும் சேவை அமைப்புகள் (ASP) :*
மாதாந்திர ஓய்வூதியத்தினை சந்தாதாரர்களின் ஓய்வுக்குப்பிறகு வழங்கும் பொறுப்பு, ஓய்வூதியம் வழங்கும் சேவை அமைப்பான ANNUITY SERVICE PROVIDER-க்கு உண்டு. மார்வாடி சேர்ஸ், ஆக்ஸீஸ் வங்கி, முத்தூட் உள்ளிட்ட 74 தனியார் நிறுவனங்களுக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


*ஓய்வூதியர்களுக்குப் பயன் இல்லாத கட்டமைப்பு:*

☀மேற்கண்ட கட்டமைப்பால் அரசு ஊழியர்களுக்கு ஒரு பயனும் இல்லை.

☀PFRDA விற்கு ஓய்வூதியம் வழங்கும் அதிகாரம் இல்லை.

☀ஓய்வுக்கு பிறகு ஊழியருக்கும் PFRDA அமைப்பிற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை

☀ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பில் உள்ள ஓய்வூதிய நிதி மேலாளர்களான SBI, LIC, UTI ஆகிய அமைப்புகளிடம் NPS-ன் கீழான ஓய்வூதியர்  விபரம் ஏதும் இல்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட NPS/CPS தொடர்பான பெரும்பாலான கேள்விகளுக்கு மேற்கண்ட அமைப்புகளிடம் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடையே மேற்கண்ட "இல்லை" பட்டியல்.

*புதிய ஓய்வூதியத் திட்டத்தினைச் செயல்படுத்தும் அமைப்புகளிடமே ஓய்வூதியம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் இல்லை / தரவுகள் இல்லை எனில், ஓய்வூதியத்திற்கு யார் தான் பொறுப்பேற்பது?????????*

விடையில்லா கேள்விகளுக்கு விடைகான தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை வாசியுங்கள்.

2 comments: