கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா? : பகுதி 9

*கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா?*

✍🏽திண்டுக்கல் எங்கெல்ஸ்.

*பகுதி - 9 :*

*ஓய்வூதிய உரிமைப் பறிப்பில் ஆ.இ.அ.தி.மு.க + தி.மு.க அரசுகள்*

பாராளுமன்றத்தில் NPS-ஐ எதிர்த்து வாக்களித்த(!?) அ.இ.அ.தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, மத்திய அரசு இவ்வுரிமைப் பறிப்புத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னரே, *இந்தியாவின் முதல் மாநிலமாகத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி ஓய்வூதியத்தினை ஒழித்துக்கட்டும் முயற்சியில், இறங்கி இன்றைய நமது இன்னலுக்கு வித்திட்டது.*

ஆம். மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை தமிழக அரசு 06.08.2003-ல் அரசாணை எண்: 259-ன் படி 01.04.2003-க்கு பிறகு பணியேற்கும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இப்புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தது.

அப்போதைய சூழலில் தான் (2003 ஜுலை) அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கப் போராட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உலக வரலாற்றில் முதல் முறையாக 1.75 இலட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் நடைபெற்ற வீரஞ்செறிந்த உரிமை மீட்புப் போராட்டங்களின் விளைவாக 2004 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் 6 அரசாணைகளில் பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு, போனஸ், வருங்கால வைப்புநிதிக் கடன் பெறுதல் உள்ளிட்ட உரிமைகளைப் பறித்த அரசே மீண்டும் வழங்கியது. ஆனால்  புதிய ஓய்வூதியம் திட்டம் தொடர்பாக மட்டும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து 01.04.2003-க்கு பிறகு பணியேற்போருக்கு 6.8.2004-ல் வெளியிடப்பட்ட அரசாணை வாயிலாக பொது வருங்கால வைப்புநிதித் திட்டம் (General Provident Fund) பொருந்தாது என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் புதிய பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத்தின் ஒரு பகுதியினை மொத்தமாகத் தொகுத்துப் பெறுதல் (Commutation) உள்ளிட்ட எவ்விதமான ஓய்வுக்காலப் பலன்களும் அறவேயில்லை என்பதனை அதன்பின் வெளியிடப்பட்ட அரசானைகளின் வாயிலாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

2006-ல் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் புதிய பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம் வரும் என காத்திருந்தனர். ஆனால், ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.
புதிய ஓய்வூதிய மசோதா பாராளுமன்றத்தால் சட்டமாக்கப்படாத நிலையில் இத்திட்டத்திற்கு  *22.01.2007-ல்* டெல்லியில் மாநில முதல்வர்களின் ஆதரவினைப் பெற, அன்றைய பிரதமர் *திரு.மன்மோகன்சிங்* தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் நிதியமைச்சர் *திரு.ப.சிதம்பரம்* "தற்போதைய ஓய்வூதிய முறையில் மத்திய மாநில அரசுகள் பெரும் நிதிச்சுமையினை எதிர்கொள்வதாகவும் இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும்" என்றும் கூறியதை *இடதுசாரிகள் ஆட்சி செய்த மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரளா தவிர*  மற்ற பெரும்பான்மையான மாநிலங்கள் ஏற்றன.

(கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சி மாற்றத்திற்குப்பின் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி 01.04.2013 முதல் இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி உள்ளது.)

இதில் தேசியக் கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் பீகார், ஒடிசா உள்ளிட்ட சில மாநிலக்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் ஊழியருக்குக் கேடு விளைவிக்கும் இத்திட்டத்தினை வரவேற்றன.

தமிழக அரசின் சார்பில் அக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, *பெரும்பான்மை மாநிலங்களின் கருத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்* (!?) என்றும் புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையினை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதைத் தமிழக அரசு ஏற்கவில்லை என்றும் வார்த்தை ஜாலங்களில் கூறினார்.

மேலும், தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கடந்த 5 ஆண்டு முழுமையான ஆட்சியின் போது புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்து நடைமுறைப் படுத்தப்பட்டதோடு, முதன் முதலில் ஊழியர்களிடம் மாதாந்திர CPS-சந்தாத் தொகை பிடித்தம் செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து 2011-ல் நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  அவர்கள் *"எனது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க ஆட்சி அமைத்தால் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தும் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவேன்"* என வாக்குறுதி வழங்கினார்.

ஆனால், ஆட்சிப்பொறுப்பேற்று 5 ஆண்டுகள் கடந்தும் புதிய ஓய்வூதிய திட்டம் இரத்து செய்வது தொடர்பாக அரசளவில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும், அப்போதைய சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது முன்னாள் திண்டுக்கல்  சட்டமன்ற உறுப்பினர் தோழர்.பாலபாரதி அவர்கள் ஓய்வூதிய திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய போது பதிலளித்த நிதி அமைச்சர் இத்திட்டம் குறித்து அரசின் ஆய்வில் உள்ளதாக தெரிவித்தார். ஆனால், புதிய ஓய்வூதிய திட்டம் இரத்து செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி அதன் பின்னரும் நிறைவேற்றப்படவில்லை.

*ஓய்வூதிய மீட்பில் இயக்க நடவடிக்கைகள் அடுத்த பதிவில். . .*

No comments:

Post a Comment