கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா? : பகுதி-5

*கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா?*

✍🏽திண்டுக்கல் எங்கெல்ஸ்.


*பகுதி - 5 :*

*ஓய்வூதிய உரிமைப் பறிப்பில் உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் (IMF):*


உலக வங்கியின் பரிந்துரைப்படி, உலக நாடுகளில் அரசு ஊழியர்களின் ஒய்வூதியத்தினை தனியார் மயமாக்கும் முயற்சியில் 1980-ல் முதலில் இறங்கிய நாடு லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த சிலி ஆகும்.

உலக வங்கியின் கட்டளைக்கு இணங்க பங்குச்சந்தையின் அடிப்படையில் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்தின்  பரிசோதனைக் கூடமாக சிலி செயல்பட்டது. 1980-ல் சிலியினை சர்வாதிகார ஆட்சி செய்த ராணுவ ஜெனரல் ஜோஸ் இராணுவம் மற்றும் காவல்துறை தவிர்த்து(!?)  அனைத்துத் துறையினருக்கும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தினார்.

இத்திட்டப்படி ஊழியர்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்யப்பட்டது. இதனை நிர்வகிக்க 7 தனியார் நிதி மேலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்காகச் சந்தாதார்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அரசு ஊழியர்களிடம் அபகரிக்கப்பட்ட தொகை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து, ஓய்வூதியம் வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் உலகப்பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக இத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

1991-ல் நிகழ்ந்த இரஷ்யப் பிரிவினைக்குப் பின்னர், உலக நாடுகளில் அமெரிக்காவை மையப்படுத்திய ஒருதுருவப் பொருளாதாரம் வலுவடைந்தது. தனது வல்லாதிக்கத்தை அனைத்து நாடுகளிலும் ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா முழுமூச்சாக நிறுவியது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்களின் பொருட்டு அரசின் பொறுப்பில் இருந்த ஓய்வூதியத்தை விடுவித்துத் தனியாருக்குத் தாரைவார்க்க அமெரிக்கா துணிந்தது. இதன் விளைவாக, அமெரிக்காவின் கருவிகளாகச் செயல்படும் உலக வங்கி, பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் நிர்பந்தம் காரணமாக உலகில் பல நாடுகளிலும் புதிய ஓய்வூதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

உலகில் உள்ள நாடுகளில், முதியோர் நலன் காப்பது என்ற பெயரில் 1994-ல் உலக வங்கியால் வெளியிடப்பட்ட "*வயது மூப்புக் கால நெருக்கடியைத் தவிர்ப்பது*" என்ற ஆய்வறிக்கை வயது முதிர்ந்தவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதில், இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள் மற்றும் வாழ்க்கைமுறை ஆகியவற்றின் காரணமாக *ஓய்விற்கு பின்னும் நீடித்து உயிர் வாழ்வதால் அரசாங்கங்களுக்கு ஏற்படும் பொருளாதாரப் பிரச்சனைகளையே பிரதானப்படுத்தியது.* எதிர்காலங்களில் ஓய்வூதியச் செலவுகள் அதிகமாவதை எப்படிச் சமாளிப்பது என்பதற்கான திட்டத்தினை இவ்வாய்வறிக்கை உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியது.

மேலும், உலக நாடுகளால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த உத்திரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டங்களுக்கு மாற்றாக, உலக வங்கி மூன்று புதிய திட்டங்களை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் பின்பற்ற அறிவுறுத்தியது.

அத்திட்டப்படி முதலாவதாக அரசாங்கத்தால் வழங்கப்படும்,

1.அனைவருக்குமான கட்டாய ஓய்வூதியத் திட்டம். அரசாங்க வரியில் கிடைத்த நிதியினைக் கொண்டு அரசாங்கத்தால் ஏழ்மையினைப் போக்க வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியத்திட்டம்.

2.ஓய்வுக் காலத்திற்கான ஊதியச் சேமிப்புகளைத் தனியார் நிர்வாகத்திற்கு உட்படுத்தும் கட்டாய ஓய்வூதியத் திட்டம்.

3.சுயவிருப்ப ஓய்வூதியத் திட்டம்;

ஆகியனவற்றைப் பரிந்துரைத்தது.

*சர்வதேச அளவில் ஓய்வூதியம் வழங்கும் அமைப்புகளைக் கொண்ட கூட்டமைப்பான ஓய்வூதிய மேற்பார்வையாளர்களின் சர்வதேச அமைப்பு*(IOPS : International Organization of Pension Supervisor) 2004 ஜூலை முதல் செயல்பட்டு வருகிறது.

இவ்வமைப்பில் இந்தியா உள்ளிட்ட 72 நாடுகள் இணைந்துள்ளன. இதில் இந்தியாவில் உள்ள ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் (PFRDA) உள்ளிட்ட 83 அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பின் உறுப்பினராக இந்தியா சேர்ந்ததிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அதற்குரிய கட்டணத்தினை IOPS அமைப்பிற்கு PFRDA செலுத்திவருகிறது.

வளரும் நாடுகள் அனைத்திலும் தோல்வியடைந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் உலகவங்கி அக்கறை காட்டினாலும் *அமெரிக்கா கடந்தகால அனுபவங்களைக் கொண்டு இதுவரை இவ்வமைப்பில் சேரவில்லை* என்பது நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இருப்பினும் அமெரிக்க ஆயுள் காப்பீட்டு குழுமம் (ACLI) இவ்வமைப்பின் பார்வையாளராக மட்டும் உள்ளது

அதிர்வுரும் பதிவுகள் தொடரும். . . .

No comments:

Post a Comment