கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா? - பகுதி 3

*கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா?*

✍🏽திண்டுக்கல் எங்கெல்ஸ்.

*பகுதி - 3 :*


*தமிழ் நாட்டின் ஓய்வூதிய வரலாறு*


தமிழகத்தைப் பொருத்தவரை, ஆரம்ப காலங்களில் அரசு ஊழியருக்கு மட்டும் மிக சொற்பமான அளவில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

1960-ஆம் ஆண்டு மாவட்டக் கழகப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக்கப்பட்டன. அதுநாள் வரையில் அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் என்பது வழங்கப்படவில்லை.

1956-ஆம் ஆண்டு தமிழக அரசு ஊழியர்களுக்காக, அரசு மற்றும் ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய வைப்புநிதித் திட்டமாக ஓய்வூதியத் திட்டத்தினை முதன் முதலில் கொண்டு வந்தது. 01.04.1956 முதல் 13.06.1966 வரை நடைமுறையில் இருந்த இத்திட்டத்தின்கீழ், ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.8-ம், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10ம் வழங்கப்பட்டது.

05.12.1964 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற ஒன்றுபட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் அன்றைய முதல்வர் திரு.பக்தவச்சலம் கலந்து கொண்டார். இம்மாநாட்டில், கூட்டணியின் தலைவர் இராமையாதேவர், *"தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் அனாதைகளை விட குறைவான ஓய்வூதியம் பெறுகின்றனர். எனவே, அனாதைகளுக்கு வழங்கப்படுகின்ற ரூ.20-ஐயாவது ஆசிரியர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும்"* என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

முதல்வர் மாநாட்டில் கூறியதாவது *"கூட்டணியின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர்களுக்கு ரூ.20 ஓய்வூதியம் வழங்கப்படும்"* என்றார். பிறகு 14.06.1966 முதல் 17.11.1968 வரை ரூ.20 ஓய்வூதியமாக வழங்கப்பட்டது.

18.11.1968 முதல் 30.09.1978 வரை ரூ.50-ம், அதன் பின்னர் ஊதியத்தில் 30/80, 33/80 என்ற விகிதங்களின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

        அரசாணை எண்: 57, நாள்: 02.02.1980-ன் படி 01.10.1980 முதல் படி-முறை (SLAB SYSTEM) அடிப்படையில் சராசரி மாத ஊதியம்,

ரூ.1000 எனில் 50%

ரூ.1000 - 1500 எனில் 45%

ரூ.1500-க்கு மேல் எனில் 40%

என ஊதியத்தின் படி ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

அதன்பின் அரசாணை எண்: 1030, நாள்: 14.12.87-ன் படி கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் சராசரி 50% 14.12.1987 முதல் வழங்கப்பட்டது.

அரசாணை எண்: 639, நாள்: 03.07.1972-ன் படி 01.04.1972 முதல் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்துடன் அகவிலைப்படியும் சேர்த்து வழங்கப்பட்டது

பதிவுகள் தொடரும்.  . . . .

No comments:

Post a Comment