கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா? : 1

*கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா?*

- திண்டுக்கல் எங்கெல்ஸ்.


பகுதி : 1


*ஏன் வாசிக்க வேண்டும் இத்தொடர் கட்டுரையை?*

புதிய ஓய்வூதியத் திட்டம் (New Pension Scheme), தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme), தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டம் (Contributry Pension Scheme) என்று பல பெயர்களில் அழைக்கப்படும்,

Øபுதிய தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் உண்மையான கோர முகம் என்ன?

Øஉண்மையிலேலே இது ஓய்வூதியத் திட்டம் தானா?

Øஓய்வு பெற்றபின் ஊதியம் பெறுவது நமக்கான உரிமையா?

Øஇத்திட்டத்தை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர் நல அமைப்புகள், இடது சாரிகள், எனப் பலரும் தொடர்ந்து எதிர்ப்பது ஏன்?

Øஎதிரும் புதிருமான மாநில, தேசியக் கட்சிகள்கூட இத்திட்டத்தை மட்டும் ஒருமனப்பட்டு ஆதரிப்பது ஏன்?

Øஇதன் பின்னணியில் உள்ள தீய சக்தி எது?

Øஇத்திட்டத்தால் இந்திய அரசு இயந்திரம் எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்ன?

Øஇந்த ஓய்வூதியப் பறிப்பை மீட்பது எப்படி?

இக்கேள்விகளுக்கான உண்மையான விடைகளை அறிந்தே ஆகவேண்டிய கட்டாயச் சூழலில், இன்றைய ஊழியர்கள் மட்டுமின்றி நாளைய ஊழியராகவுள்ள தங்கள் பிள்ளைகளுக்காகவும் நாம் யாவருமே அறிந்து தெளிந்து செயல்படவே இக்கட்டுரை.


*ஓய்விற்குப் பின்னான ஊதியம் உரிமையா? கருணையா?*

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 14-ன் படி அனைவரையும் சமமாகப்பாவிக்க வேண்டும் என்றும், 01.04.1979 தேதி முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய கணக்கீட்டின் படி வழங்கப்படுவதைப் போன்றே 31.03.1979-ற்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கும் ஒரே விதமாக ஓய்வூதியக் கணக்கீடு செய்ய வேண்டும் என்றும், ஓய்வூதியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி தொடுக்கப்பட்ட "D.S நகரா எதிர் இந்திய அரசு" வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திராசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு,

★ ஓய்வூதியம் என்பது ஒரு உரிமை.

★ அது கருணைத்தொகை அல்ல.

★ அரசு ஊழியரின் நீண்ட கால மற்றும் திறமையான பணிக்கான கொடுபடா ஊதியம்.

★ ஓய்வூதியம் என்பது சமூகப் பொருளாதார நீதியின் பொருட்டு வாழ்நாளின் இறுதிப் பகுதியில் கொடுக்கப்பட வேண்டிய பொருளாதாரப் பாதுகாப்பு.

★ அரசியல் சட்டப்பிரிவு 41-ன்படி முதுமை, நோய், இயலாமை மற்றும் உடல் ஊனம் போன்ற நேர்வுகளின் போது அரசு வழங்க வேண்டிய உதவிகளைச் செய்து சமுதாயத்தில் ஒரு மேம்பட்ட வாழ்க்கையை வாழச் செய்வதே சேமநல அரசு செய்யும் பணி.

என்று வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.


*N.P.S / C.P.S: பங்களிப்பு ஓய்வூதியமா? பங்கு-அழிப்பு ஓய்வூதியமா?*

இருக்கின்ற உரிமைகளை மறுக்கின்ற / பறிக்கின்ற போது அதை வார்த்தை ஜாலங்களால் மறைப்பது "பொருளாதார மேதைகளுக்கே உரிய தந்திரம்".

எனவேதான் எவ்வித ஓய்வூதியப் பலனும் இல்லாத இத்திட்டத்திற்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் (NEW PENSION SYSTEM) என்று பெயரிட்டுள்ளனர். உண்மையில் இது ஓய்வூதியத்தினை முற்றாய் ஒழிக்கும் ஒன்றுமில்லா ஓய்வூதியத் திட்டம் *(NO PENSION SYSTEM).*

ஓய்வூதியத்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரால் அலங்காரமாகச் சொல்லப்படுகின்ற முயற்சிகள் உண்மையில் ஓய்வூதியம் என்பதைக் கனவாய் - கானல் நீராய் மாற்றிவிடும். இதனால் ஏற்படும் பாதகங்கள் அரசு ஊழியர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய நாட்டையும் பழாக்கிவிடும்.

ஆம்!

தனியார் துறைக்கும் அரசுத் துறைக்கும் உள்ள மிக முக்கிய வேறுபாடே ஓய்வூதியம் தான். பலர் அரசுப் பணியை விரும்பக் காரணமும் இதுவே. ஓய்வூதியமே இல்லை எனில், அரசிற்குத் திறன் வாய்ந்த ஊழியர்கள் கிடைப்பது அரிதாகிவிடும். இதனால் இந்திய அரசு இயந்திரத்தின் இயக்கம் பழுதடைய நேரிடும்.

மறுபுறம், இந்திய மனித வளம் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்குக் குறைந்த கூலியில் கொத்தடிமைகளாகக் கிடைக்கக் கூடும்.

எனவே, இப்புதிய ஓய்வூதிய திட்டத்தின் முழு வடிவத்தினையும், பரிமானத்தினையும் தெளிவாகப் புரிந்து கொண்டு, நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தினை முறியடிக்க ஒன்றுபட்டுப் போராடுவது அரசு ஊழியர், ஆசிரியர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர் முன்னிற்கும் மிகப்பெரிய கடமையாகும்.

நம் முன் உள்ள மிகமுக்கியக் கடமையை முழுமையாக உணர்ந்து கொள்ள ஓய்வூதிய வரலாற்றையும், ஓய்வூதியப் பறிப்பின் பின்னணியையும், அதன் சூழ்ச்சிமிகு செயல்பாடுகளையும் அறிந்து தெளிவுற இத்தொடர் கட்டுரையை முழுமையாக வாசிக்க வேண்டுகிறேன்.

தாங்கள் வாசிப்பதோடு நில்லாது இதனை நமது சக ஊழியர்களிடமும், பொதுமக்களிடமும் பகிர்ந்து ஓய்வூதிய உரிமை பற்றிய விழிப்புணர்வையும், அவ்வுரிமையை மீட்பதற்கான போர்க்குணத்தையும் வளர்க்க வேண்டுகிறேன்.

பதிவுகள் தொடரும். . . .

No comments:

Post a Comment