கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா? : பகுதி 4

*கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா?*

✍🏽திண்டுக்கல் எங்கெல்ஸ்.

*பகுதி - 4 :*

*பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள்*

அரசு ஊழியர்களின் பல்வேறு வகையான தியாகங்கள் மற்றும் கூட்டுப் போராட்டங்களின் காரணமாக இந்தத் திட்டத்தில்,

Øஓய்வூதியம் (Pension)

Øகுடும்ப ஓய்வூதியம் (Family Pension)

Øபணிக்கொடை (Gratuity)

Øஓய்வூதியத்தினை மொத்தமாகத் தொகுத்துப் பெறுதல் (Commutation)

Øவருங்கால வைப்பு நிதி

முதலான உரிமைகள் கிடைத்தன. இந்தப் பலன்களைப் பெற, *பணிக்காலம் / இறுதியாகப் பெற்ற ஊதியத்தின் அடிப்படையில், திட்டமிட்ட உறுதியான கணக்கீடுகள் மூலம் ஓய்வூதியப் பலன்கள்* கிடைக்கப்பெற்றன.

மேலும் ஊதியக் குழுக்களின் மூலம், விலைவாசி உயர்வின் அடிப்படையில் அகவிலைப்படி உயரும் போது ஓய்வூதியமும் உயர்ந்ததோடு, பிற பலன்களை முன்னர் பெற்றதைவிடக் கூடுதலாகப் பெற முடிந்தது.

இந்த ஓய்வூதியத் திட்டத்திற்காக ஒரு முறையான நிதியினை மத்திய, மாநில அரசுகள் நிறுவவில்லை. மேலும், Pay-as-you-go என்ற அடிப்படையில் அரசின் தொகுப்பு நிதி (Consolidated fund)-யில் இருந்து போகிற போக்கில் பணப்பட்டுவாடாவாக மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.  இத்திட்டமானது  *31.03.2003-க்கு முன்பு வரை பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும்* நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.


*குடும்ப ஓய்வூதியம்:*

குடும்ப ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர் பணியின் போது அல்லது ஓய்விற்குப் பின், மரணம் அடைந்தால் குடும்ப நலன் கருதி தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமாகும். தமிழக அரசால் 1964 முதல் குடும்ப ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும், பல்வேறு குறைபாடுகளால் பெரும்பான்மையான தகுதியானவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

அரசாணை எண்: 748, நாள்: 26.05.1979-ன்படி 01.04.1979 முதல் முறையான குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.


*பணிக்கொடை:*

அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலோ அல்லது பணிபுரியும் போதே மரணம் அடைந்தாலோ அவர்களின் பணிக்காலத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம்  2 மாத ஊதியமும் அதிகபட்சமாக 16.5 மாத ஊதியமும் (அதிகபட்சமாக 7வது ஊதியக்குழுவில் ரூ.20 இலட்சம்) பணிக்கொடையாக வழங்கப்படுகிறது.


*பொது வருங்கால வைப்புநிதித் திட்டம்:*

வருங்கால வைப்புநிதித் திட்டப்படி அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 12% தொகை பிடித்தம் செய்யப்பட்டு அத்தொகைக்கு அரசால் அவ்வப்போது வழங்கப்படும் வட்டியுடன் சேர்த்து பொதுக்கணக்கின் கீழ் வைக்கப்படுகிறது.

இத்தொகையினை 6 மாதத்திற்கு ஒரு முறை திரும்பச் செலுத்தக் கூடிய கடனாகக் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவச் செலவு, திருமணம் மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவின் பொருட்டு ஊழியர்கள் பெறலாம்.

15 ஆண்டு பணிமுடித்த ஊழியர்கள் ஆண்டிற்கு ஒரு முறை இருப்பில் உள்ள தொகையில் 90% தொகையை திரும்பச் செலுத்தாத வகையிலும் பெறமுடியும்.

ஆனால், *புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, வைப்புநிதி உள்ளிட்ட மேற்கண்ட எவ்விதப் பயன்களும் இல்லை.*

பதிவுகள் தொடரும். . . .

No comments:

Post a Comment