கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா? - பகுதி 2

*கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா?*

✍🏽திண்டுக்கல் எங்கெல்ஸ்.

*பகுதி - 2 : ஓய்வூதியத் தோற்றமும் உலக நாடுகள் & இந்தியாவில் ஓய்வூதிய அறிமுகமும்*


*ஓய்வூதியத்தின் தோற்றம் :*

முதன் முதலில், ஜார் மன்னராட்சியின் பிடியிலிருந்து இரஷ்யப்புரட்சியினால் மீண்ட ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில், லெனின் தலைமையிலான மக்கள் நல அரசு, உழைப்பாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகளிலும் ஓய்வூதியம் வழங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. எனவே, இப்புரட்சிப் பரவுவதைத் தடுத்திடும் நோக்கில் அந்நாடுகள் சிலவற்றில் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓய்வூதியத் திட்டம் ஏற்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.



*உலக நாடுகளில் ஓய்வூதியம்:*


*சீனா (National Social Security Fund) :*

தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியினை ஏற்படுத்தி உத்திரவாத அடிப்படையில் குறைந்தபட்சம் மாதம் 55 யுவான் (சீன ரூபாய்) வழங்கும் ஏற்பாடு உள்ளது.  இன்றைய நிலவரப்படி சீனாவில் 12.30 கோடி ஓய்வூதியர்கள் உள்ளனர். உலக அளவில் அதிக எண்ணிக்கையில் ஓய்வூதியர்கள் உள்ள நாடாக சீனா இருந்த போதிலும் உழைப்போரின் நலன் கருதி குறைந்தபட்ச ஓய்வூதியத்தினை உறுதிபடுத்தியுள்ளது.


*தென்னாப்பிரிகா (Social Security Agency) :*

சமூகப் பாதுகாப்பு முகமை மூலமாக குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.1,200 வழங்கப்படுகிறது. 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.20 ஓய்வூதிய உயர்வு வழங்கப்படுவதுடன் பிற ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதிய உயர்வு வழங்கப்படுகிறது.


*பிரான்ஸ்:*

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் ஓய்வூதியம் எனில் ஆண்டிற்கு 8,507 யூரோவும், குடும்பத்தில் உள்ள இருவரும் ஓய்வூதியம் பெறுவோராயின் இருவருக்கும் சேர்த்து மொத்தமாக ஆண்டிற்கு 13,890 யூரோவும் வழங்கப்படுகிறது. இதில், ஊழியரின் பங்களிப்பு 6.65% அரசின் பங்களிப்பு 8.3%.


*ஸ்பெயின்:*

குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் 588 யூரோ அல்லது ஆண்டிற்கு 8,229 யூரோ என நிர்ணயம் செய்துள்ளது.


*பாகிஸ்தான்:*

குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.3,600-ஐ 01.01.2012 முதல் வழங்கி வருகிறது.



*ஆங்கிலேய ஆட்சியின்கீழான இந்தியாவில் ஓய்வூதியம்:*

ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழான இந்தியாவில், தங்கள் நாட்டிலிருந்து பல பணியாளர்களை இந்தியாவிற்குக் கொண்டு வந்து பணிகளில் ஈடுபடுத்தினர். ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவனப் பணியாளர்கள் பணிக்காலத்திற்குப் பின்பும் ஆங்கிலேயர்களுக்குத் தொடர்ந்து விசுவாசமாக நடந்து கொள்வதற்காகவும், வயதான காலத்தில் ஓரளவுக்காவது வாழ்வதற்கேற்பவும் ஓய்வூதிய திட்டத்திட்டமானது வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித்துறையில் பணிபுரியும் ஆங்கிலேயப் பணியாளர்களுக்காக முதன் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவன ஆட்சி, 1857-ற்குப் பின்னான இங்கிலாந்து அரசியின் நேரடி ஆட்சி நிர்வாகத்தில், இந்தியாவைத் தொடர்ந்து ஆள்வதற்கான பல்வேறு தேவையினை ஒட்டி, கல்வியறிவு பெற்ற இந்தியர்கள் பலரையும் அரசுப்பணிகளில் நியமித்தனர். இவர்களில் உயர் பதவியில் நியமிக்கப்பட்ட இந்தியர்களுக்கும், தம் நாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கியதைப் போன்று ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதால், 1872-ஆம் ஆண்டு இந்திய ஓய்வூதியச் சட்டம் (Indian Pension Act 1872) அன்றைய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இச்சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஆணையாளர்களின் பரிந்துரையின்படி ஆங்கிலேய ஆட்சியின், அரசு உயரதிகாரிகளின் பணி ஓய்விற்குப் பின், நிலமாகவோ அல்லது பணமாகவோ ஓய்வூதியம் வழங்கும் முறை இந்தியாவில் முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.



*இந்தியக் குடியரசில் (பழைய) ஓய்வூதியம்:*

நாடு விடுதலை பெற்றபின், இந்தியக் குடியரசில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் என்பது, அரசின் பங்களிப்புடன் கூடிய வருங்கால வைப்புநிதித் திட்டமாக (Contributed Provident Fund) செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 6% பிடித்தம் செய்யப்படும், அதற்கு ஈடான தொகையினை அரசும் வழங்கும். ஒரு கட்டத்தில் தன்னால் பங்களிப்புத் தொகையை வழங்க முடியாது என்ற நிலையில், அரசு தனது பங்களிப்பை நிறுத்தியது.

அதற்குப் பதிலாகப் பழைய ஓய்வூதியத் திட்டமான வரையறுக்கப்பட்ட பலன்களை உள்ளடக்கிய ஓய்வூதியத் திட்டத்தினை (Defined Benefit Pension System) அரசு செயல்படுத்தத் தொடங்கியது.

பதிவுகள் தொடரும். . . .

No comments:

Post a Comment